அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு அங்கீகாரம்! ( Unapproved Plot Registration)
தெரிந்தோ, தெரியாமலோ அன்அப்ரூவ்டு என்று சொல்லப்படுகிற அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கியவர்களே இன்றைக்கு தமிழகத்தில் அதிகம். குறைந்த விலையில் கிடைப்பதால், இந்த மனைகளையே அதிகம்பேர் வாங்கி இருக்கிறார்கள் அல்லது வாங்கியும் வருகிறார்கள். பல மனைகள் குறைவான பரப்பில் (சுமார் 600 ச.அடி) போடப்பட்டிருப்பது மற்றும் குறைவான அகலத்தில் சாலைகளுக்கு இடம் விடப்பட்டு இருக்கின்றன.
இந்த அன்அப்ரூவ்டு மனைகளில் வீடு கட்ட அனுமதி மற்றும் வங்கிக் கடன் கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டு, பலர் வீடு கட்ட முடியாமல் இருக்கிறார்கள். இதற்கு தீர்வு காணும் விதமாக தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத அனைத்து மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவர இருக்கிறது. இதற்கான திட்ட தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாகவும், இதற்கு அங்கீகாரம் அளிக்கும் அரசாணையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் பிஸியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
தமிழகத்தில், புதிதாக லேஅவுட் போடப்படும்போது நகரமைப்புத் துறை (டி.டிசி.பி) அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ) அங்கீகாரம் பெறவேண்டும். இப்படி அங்கீகாரம் பெற லேஅவுட்டில் பூங்கா, பள்ளிக்கூடம், பொதுப் பயன்பாடு போன்றவற்றுக்கு இடம் ஒதுக்கவேண்டும். சாலையின் அகலம் குறைந்தது 23 அடியாவது இருக்க வேண்டும். இப்படி செய்யும் போது, மொத்த மனையில் சுமார் 35% இதற்கே போய்விடுவதால் அதிகம் செலவாகிறது என ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள், அங்கீகாரம் இல்லா மனைகளைப் பிரித்து விற்றுவிடுகிறார்கள்.
இந்தப் பிரச்னைக்கு தீர்வாக கடந்த 1999, 2001, 2006-ம் ஆண்டுகளில் தனித்தனியாக வரன்முறைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. சி.எம்.டி.ஏ. எல்லைக்கு வெளியே மற்றும் நகர்ப்புற மனைப்பிரிவுகள் மட்டும் வரன்முறைப்படுத்தப்பட்டன. சி.எம்.டி.ஏ., எல்லைக்குள் உள்ள மனைகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அன்அப்ரூவ்டு மனைகளை வரன்முறைப்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கான வரன்முறைத் திட்டம் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.
''இத்திட்டம் இதற்கு முந்தைய வரன்முறை திட்டங்களைவிட அதிக சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 16 அடி அகல சாலை இருந்தால் இந்த வரன்முறை திட்டத்தின் கீழ் மனைப் பிரிவுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இதற்கு குறைவாக சாலையின் அகலம் இருந்தால், அந்த மனைகளை வரன்முறை செய்வது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு முடிவு செய்யும். இரு ஆண்டுகளுக்கு நடைமுறையில் அமலில் இருக்கும்விதமாக இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்றார்.
மற்றொரு அதிகாரியோ, ''சாலையின் குறைந்தபட்ச அகலம் எத்தனை அடி இருக்க வேண்டும் என்பதை உயர் அதிகாரிகளே முடிவு செய்வார்கள். இப்படி அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் பெற கட்டணம் இருக்கிறது. மனை அமைந்திருக்கும் பகுதி பஞ்சாயத்தில் உள்ளதா? அல்லது நகராட்சி பகுதியில் உள்ளதா? என்பதைப் பொறுத்து சதுர அடிக்கு சுமார் 3 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை வரன்முறைக் கட்டணம் இருக்கும். தமிழக முதல் அமைச்சரின் ஒப்புதல்கிடைத்ததும் அரசாணை வெளியிடப்படும்'' என்றார்.
பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளுக்கு இப்படி அங்கீகாரம் அளிப்பது குறித்து சென்னையை அடுத்த தாம்பரம் சூரியன் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மணியிடம் பேசினோம்.
''அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கிய லட்சக்கணக்கானவர்களுக்கு இது சந்தோஷமான விஷயம்தான். பல அன்அப்ரூவ்டு லேஅவுட்களில் சாலைகளின் அகலம் 12 அடிகூட இல்லை. இது போன்ற மனைகளுக்கு அங்கீகாரம் கொடுத்தால் நிச்சயம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். இந்தக் குறுகிய சாலைகளில் வீடு கட்ட மணல், ஜல்லி, கல் போன்றவற்றைக்கூட லாரிகளில் கொண்டுவர முடியாது. இனி எந்தப் பகுதியில் லேஅவுட் போடப்படுவதாக இருந்தாலும் குறைந்தது 20 அடி அகலத்துக்கு சாலைகளுக்கு இடம்விட வேண்டும் என்று இருந்தால்தான் நல்லது.
இதற்கு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் சேர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இதுபோன்ற சாலை அகல பிரச்னை எதிர்காலத்தில் வராமல் இருக்க, மனையை பத்திரம் பதியும்போதே இத்தனை அடிக்கு குறைவாக இருந்தால் பத்திரம் பதிய முடியாது என சட்டம் கொண்டு வந்து, அதனை தீவிரமாக அமல்படுத்துவது அவசியம்'' என்றார்.
இனிவரும் காலத்திலாவது புதிய வரன்முறை களின்படி லேஅவுட்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!
Comments
Post a Comment