பாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்!
பாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்!
இந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர்.
பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை வீடுகளை அமைப்பது எப்படி என்பது பற்றி பல்வேறு நாடுகளின் கட்டட வடிவமைப்பாளர்கள் கலந்துகொண்டு விளக்கினார்கள்.
இந்தப் பசுமை வீடுகளைப் பற்றி சி.ஐ.ஐ. அமைப்பைச் சேர்ந்த ஆனந்த் நமக்கு தெளிவாக எடுத்துச் சொன்னார். 'கான்ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரி-ன் (CII) ஒரு பகுதிதான் ஐ.ஜி.பி.சி. என்னும் அமைப்பு. 2001-ல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் நோக்கம், பசுமை வீடுகளைக் கட்டுவதன் மூலம் இயற்கையைக் காப்பதுதான். ஆரம்பித்த முதல் ஆண்டில், இந்தியாவில் 20,000 சதுர அடியில் அமைந்த ஒரே ஒரு கட்டடம்தான் பசுமைக் கட்டடமாக அமைக்கப்பட்டது. பசுமைக் கட்டடம் என்பது வீட்டுக்கு மட்டுமில்லாமல், ஐ.டி பார்க்குகள், அரசுக் கட்டடங்கள், மருத்துவமனைகள் என்று எல்லாவற்றுக்கும் உகந்தவையாக இருக்கும்'' என்றவர், பசுமை வீட்டின் கட்டமைப்பு குறித்து விளக்கினார்.
''முதலில் ஒரு கட்டடம் அமையப்போகும் இடத்தைத் தேர்வு செய்து அதற்கு ஏற்ப கட்டடம் கட்ட வேண்டும். அந்த இடத்தில் உள்ள மண் வளத்தைக் காப்பது, வீட்டில் குளியறை, சமையல் அறையில் பயன்படுத்தும் நீரை மறுசுழற்சி செய்து செடிகளுக்கு மற்றும் வீட்டின் பிற தேவைகளுக்கு உபயோகப்படுத்துவது, மின்சார உபயோகத்தைக் குறைப்பது போன்ற விஷயங்களை வீடு கட்டுவதற்கு முன்னரே திட்டமிட்டு செயல்படுத்துவதுதான் பசுமை வீட்டின் செயல்பாடு.
ஏற்கெனவே கட்டிமுடித்த கட்டடங்களையும் பசுமையாக மாற்றியமைக்க முடியும். இதற்கு பல திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக ஏற்கெனவே இருக்கும் கட்டடங்களுக்கு பசுமைக்கான ரேட்டிங் தந்தது எங்களின் இந்த அமைப்புதான். பல்வேறு கட்டடங்களுக்கு ஏற்றாற்போல் எட்டு வகையான ரேட்டிங் உள்ளது. பழையக் கட்டடங்களைப் புதிதாக மாற்றும்போது அந்தக் கட்டடத்தை இடித்ததிலிருந்து கிடைக்கும் பொருட்களைப் புதிய கட்டடத்தில் பயன்படுத்திக்கொள்கிறோம். அதனால் புதிய வளங்களை அதிகளவில் சுரண்டுவதில்லை. இதன்மூலம் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த இயற்கையை விட்டுச் செல்ல முடியும்''என்றார்.
பசுமை வீடுகளைக் கட்ட அதிகம் செலவாகுமோ என அவரிடம் கேட்டோம். '2001-ல் பசுமை வீடு என்னும் திட்டத்தைத் தொடங்கியபோது வீடு கட்ட ஆகும் செலவு 18% அதிகமாக இருந்தது. ஆனால், இன்றைய நிலையில் 4-5% அதிக முதலீடுதான் தேவைப்படுகிறது. அதுவும் ஆரம்பக் கட்ட திலேயே தொடங்கிவிட்டால் செலவை 2 சத விகிதமாகக்கூட குறைக்க முடியும். வழக்கமான கட்டடங்களில் ஒரு மில்லியன் சதுர அடிக்கு 10-12 மெகாவாட் மின்சாரம் தேவை எனில், இந்தப் பசுமைக் கட்டடத்துக்கு 5-6 மெகாவாட் மின்சாரமே போதுமானது. ஆக, மின்சார செலவை 20-40% வரை குறைக்க முடியும். தண்ணீர் செலவை 40-50% வரை குறைக்க முடியும். இதனால், அதிகம் செலவாகும் பணத்தை அடுத்த சில ஆண்டுகளிலேயே திரும்ப எடுத்துவிட முடியும்'' என்றார்.
பசுமை வீடுகளுக்கு மக்களிடம் என்ன வரவேற்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள கருத்தரங்கில் ஒருபகுதியாகப் போட்டப்பட்டிருந்த ஸ்டால்களுக்குச் சென்றோம். மக்கள் ஆர்வத்தோடு பசுமை வீடு களுக்கான புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டிருந்தனர்.
'தொடக்கத்தில் அதிக செலவுக்கு பயந்த மக்கள் இப்போது பசுமை வீடுகளின் பயனை உணர்ந்து, தங்கள் வீடுகளையும், கட்டடங்களையும் பசுமையாக மாற்றும் முயற்சியில் இறங்கி இருப்பதாக’ச் சொன்னார்கள். பசுமை வீடுகளில் பயன்படுத்தப்படும் செப்புக் குழாய்கள், உயவு எண்ணெய் தேவைப்படாத மோட்டார்கள் (magnetic levitation),குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் தானியங்கி கருவிகள் என பலவற்றை இந்த ஸ்டால்களில் பார்க்க முடிந்தது.
இனி புதிதாக வீடு கட்டுகிறவர்கள் பசுமை வீடுகளைக் கட்ட முயற்சிக்கலாமே!
Thanks @ Vikatan
Comments
Post a Comment