வாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்!

வாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்!
வீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெறுவதில்தான் எத்தனை குழப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பதே பலருக்கும் புரிந்துகொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீடுகளும் ஒரேமாதிரியாகவும் இருப்பதில்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக்கொண்டதாக இருக்கிறது. எந்த ஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று பலரும் க்ளைம் செய்கின்றனர்.
வீட்டு வாடகைபடி வரிச் சலுகை க்ளைம் செய்வதில் புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு ஆணையம். அதாவது, ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் வீட்டு வாடகைபடி க்ளைம் செய்தால்,  வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண் அவசியம் தர வேண்டும் என்று அறிவித்துள்ளது.  வீட்டு வாடகைபடிக்கு எவ்வாறு லாபகரமாக வரி விலக்கு பெறலாம் என்று ஆடிட்டர் சத்தியநாராயணனுடன் பேசினோம்.
''வருமான வரிச் சட்டம் 10(13ஏ) பிரிவின்படி ஹெச்.ஆர்.ஏ.-க்கு வரிச் சலுகை தரப்படுகிறது. வீட்டு வாடகைபடிக்கு வரிச் சலுகை பெற முதலில் வாடகை வீட்டில் குடியிருக்கவேண்டும். அதற்கு முறையான ரசீது தரவேண்டும். வாடகை வருமானம் பெறுபவர்களில் பலர் தாங்கள் வாங்கும் உண்மையான வாடகையைத் தங்கள் வருமானத்தில் சேர்த்துக்காட்டுவதில்லை. இதைக் கண்காணிப்பதற்கும் அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை சரிசெய்வதற்கும் கொண்டுவரப்பட்ட நடைமுறைதான் இது.  வீட்டு வாடகையைச் செலுத்தி முறையாக ரசீது வாங்குபவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அதுபோல, வாடகை வருமானம் ஈட்டும் வீட்டு உரிமையாளர் தனது வாடகை வருமானத்தை வரிக் கணக்கின் கீழ் கொண்டுவந்துவிட்டால் சிக்கல் இல்லை.
சிலர் ஒருமாதத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை ஹெச்.ஆர்.ஏ. க்ளைம் செய்கின்றனர்.  அந்த நிலையில் அந்த வாடகை வருமானத்தை வீட்டு உரிமையாளர் வரிக் கணக்கில் கொண்டு வருவதை உறுதி செய்வதற்காகவே இந்த நடைமுறை. வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வாடகை தருபவர், வரிவிலக்கு பெறும்போது வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண்ணை தரவேண்டும்.  
ஹெச்.ஆர்.ஏ வரிவிலக்கு கணக்கிடும் முறையையும் அவர் விளக்கினார். வீட்டு வாடகைபடி வரிவிலக்குக்கு கீழ்க்கண்டுள்ள  3 முறைகளில் எது குறைவோ, அதற்கு வரிவிலக்கு கிடைக்கும்.
1) சம்பளத்தில் பெறும் அசலான வீட்டு வாடகைபடி.
2) கட்டும் வாடகை யில் சம்பளத்தின் 10%-த்தைக் கழிப்பது (இங்கு சம்பளம் என்பது அடிப்படை சம்பளம், டி.ஏ. மற்றும் விற்பனை கமிஷன் ஆகியவை சேர்ந்ததாகும்).
3) சம்பளத்தில் 40% (மெட்ரோபாலிடன் நகரங்களுக்கு 50%).
மேற்கூறியபடி வரிவிலக்கை கணக்கிட்டு அதனை வீட்டு வாடகைபடியில் கழித்ததுபோக உள்ள தொகை, வரிக்கான வருமானத்தில் சேர்க்கப்படும். (பார்க்க, பெட்டிச் செய்தி)  

ஹெச்.ஆர்.ஏ வரிச் சலுகை பெற சொந்த வீட்டில் வசிப்பவராக இருக்கக்கூடாது. சொந்த வீட்டில் வசிப்பவர்கள்
ஹெச்.ஆர்.ஏ.க்கு முழு வரி கட்டவேண்டும். ஆனால், சொந்த வீடு வைத்திருந்து அதற்கு வீட்டுக் கடனை செலுத்திவந்தால், அசல், வட்டி இரண்டுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. தவிர, கணவன் மனைவி இருவருக்குமே வீட்டு வாடகைபடி வரிச் சலுகை பெறலாம் எனில், அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் யாராவது ஒருவர்தான் பெற முடியும். வெளிமாநிலத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்துக்காகவும் வீட்டு வாடகைபடியை ஒருவர் க்ளைம் செய்யலாம். பெற்றோருக்கு வாடகை தந்தாலும் முறையான ரசீது இருந்தால்தான் வரிச் சலுகை பெறமுடியும்'' என்றார்.
Courtesy: Vikatan

Comments

Popular posts from this blog

ரேரா என்றால் என்ன? தமிழகத்தில் எந்த நிலையில் இருக்கிறது ரெரா சட்டம்?

Things To Consider When Looking At Homes For Rent

Pros and cons of installing a mobile tower on your property