வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்!

வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்!நன்றி : நாணயம் விகடன் 

வீடு வாங்க/கட்ட/புதுப்பிக்க, வீட்டுக் கடன் வாங்கும்போது அதற்கான வட்டியை ஆண்டு வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். இப்படி ஒரு சலுகை  இருப்பதினாலேயே பலரும் சொந்த வீடு என்கிற கனவை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. இதுமாதிரி தரப்படும் வரிச் சலுகைக்கு சில நிபந்தனைகளை வருமான வரிச் சட்டம் விதிக்கிறது. வீட்டுக் கடன் வாங்கி, அதற்கான சலுகைகளைப் பெற நினைப்பவர்கள் இந்த நிபந்தனைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். என்னென்ன நிபந்தனைகள்?
1. வட்டித் தொகையை வருடத்துக்கு ஒருமுறை, அதாவது, நீங்கள் கடனுக்கான வட்டியைக் கட்டவில்லை என்றாலும் கழித்துக் கொள்ளலாம். இதைக் கொஞ்சம் விரிவாக எடுத்துச் சொன்னால், தெளிவாகப் புரியும்.
ஒருவர் 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார். அந்த வருடம் வீட்டுக் கடனுக்கான வட்டி 1 லட்சம் ரூபாய் (10% வட்டி), அந்த வட்டியை அவர் கட்டினாலும் வரிச் சலுகை கிடைக்கும். கட்டவில்லை என்றாலும் வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கும். இந்த வட்டியை இவர் 2 வருடம் கழித்துக்கூட கட்டிக்கொள்ளலாம். ஆனால், சட்டப்படி கட்டாத வட்டிக்கும் முன்கூட்டியே வரிச் சலுகை பெற முடியும்.
2. வீட்டுக் கடன் வட்டிக்கு வரிச் சலுகை பெறுவதற்கு, சொத்துப் பத்திரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வங்கியின் பெயரில் அடமானம் (Deposit of Title Deeds) வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.  வீடு கட்ட, உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் வாங்கும் கடனுக்கான வட்டிக்கும் வரிச் சலுகை பெற முடியும். (ஆனால், வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் அல்லாதவர்களிடம் வாங்கும் கடனுக்குத் திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச் சலுகை கிடையாது.)
3. டெல்லி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில், கட்டாத வட்டிக்கு விதிக்கப்படும் வட்டிக்கு (இன்ட்ரஸ்ட் ஆன் இன்ட்ரஸ்ட்) கழிப்புக் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளது.
4. வீட்டுக் கடன் பெறுவதற்காகக் கொடுக்கப்படும் கமிஷன் அல்லது புரோக்கர் கமிஷன் எதையும் வரிச் சலுகைக்காகக் கழித்துக்கொள்ள முடியாது.
5. முன்பு வாங்கிய வீட்டுக் கடனை அடைப்பதற்கு, ஒரு புதுக் கடன் வாங்கி இருந்தால், அதற்குண்டான (புதுக் கடன்) வட்டியைக் கழித்துக்கொள்ள அனுமதி உண்டு. இது தனிநபர் கடனாக (பெர்சனல் லோன்) இருந்தாலும் வட்டியைக் கழித்துக்கொள்ளலாம். ஆனால், புதுக் கடன், தனிநபர் கடனாக இருந்தால் அசலுக்கு வரிச் சலுகை கிடைக்காது.
6. கடன் வாங்கிய நபர்களுக்கு (ஒரிஜினல் ஓனர்கள்) மட்டுமே வட்டியைக் கழித்துக்கொள்வதற்கு உரிமை உண்டு. அவருக்குப் பின்னால் வருகிற (வாங்குகிறவருக்கோ அல்லது சொத்தை அடைந்தவருக்கோ) அந்த உரிமை கிடையாது. ஒருவர் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.2 லட்சம் வரை திரும்பக் கட்டும்  வட்டிக்கு வரிக் கழிவு கிடைக்கும். அதற்கு கீழ்க்கண்ட சட்ட திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
* வீட்டுக் கடன் ஏப்ரல் 1, 1999-க்குப் பின்பு வாங்கி இருக்க வேண்டும். அதற்கு முன்பு வாங்கியிருந்தால், ஆண்டுக்கு ரூ.30,000 மட்டுமே கழித்துக்கொள்ள முடியும்.
* கடன் வாங்கிய வருடத்திலிருந்து மூன்று வருடத்துக்குள் வீட்டை வாங்குவதோ, கட்டுவதோ முடிவடைய வேண்டும். அப்போதுதான் வட்டியில் ரூ.2 லட்சம் வரிச் சலுகை பெற முடியும்.
* வீடு கட்ட கடனை சில தவணை களாக வங்கி கடன் கொடுத்தால், கடைசித் தவணைக் கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுக்குள் வீட்டை கட்டி முடித்தால்தான் வட்டிக்கான வரிச் சலுகை ரூ.2 லட்சம் கிடைக்கும். இல்லை எனில், ரூ.30,000தான் கழித்துக்கொள்ள முடியும்.
* கடன் கொடுத்தவர்/ வங்கி/ வீட்டு வசதி நிறுவனத்திடமிருந்து, மொத்த வட்டி இவ்வளவு கட்டியிருக்கிறார் என்று சர்ட்டிஃபிகேட் மூலமாகத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் வட்டி வரிச் சலுகைக்கான தொகையை சம்பளத்திலிருந்து/வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ள முடியும்.
* வீட்டை ரிப்பேர் செய்ய அல்லது புதுப்பிக்கக் கடன் பெற்றால் வட்டியில் ரூ.30,000 மட்டுமே கழிக்க முடியும்.
ரூ.2 லட்சம் கழிக்க முடியாது.
* வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது வீட்டுக் கடனுக்கான வட்டியை மட்டும் கட்டி வருவோம். இதனை ப்ரீ இஎம்ஐ என்பார்கள். இந்த வட்டிக்கான வரிச் சலுகையை, வீடு கட்டி முடிந்து தவணை (இஎம்ஐ) கட்ட ஆரம்பித்த ஆண்டு முதல் 5 ஆண்டுக்குள் பெற முடியும். இந்த வட்டியை ஐந்து சம தவணைகளாக பிரித்து ஐந்து ஆண்டுகளில் வரிச் சலுகை பெற முடியும்.
உதாரணத்துக்கு, 2012 ஏப்ரலில் ஒருவர் 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீடு கட்டி முடிவதற்குள் வட்டியை மட்டும் கட்டி வருகிறார். ஆண்டுக்கு 1 லட்சம் வீதம், இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் ரூபாய் வட்டி கட்டினார். இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் தவணை கட்ட ஆரம்பிக் கிறார். இவர் கட்டிய 2 லட்சம் ரூபாய் வட்டியை 5 சம தவணையாக ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா ரூ.40,000 வீதம் கழித்துக்கொள்லாம். 2014-15ம் ஆண்டில் இவருக்கான வட்டி 1 லட்சம் மற்றும் ரூ.40,000-ஆக மொத்தம் ரூ.1,40,000 கழித்துக் கொள்ளலாம். 
 
கடன் தொகை ரூ.20 லட்சமாக, இருந்தால், வட்டி மட்டுமே 2014-15-ல் ரூ.2 லட்சமாக இருக்கும். அப்போது, ப்ரீ இஎம்ஐ வட்டி 80,000 ரூபாயாக இருக்கும். அப்போது அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். இதுவே வீட்டை வாடகைக்குவிட்டிருந்தால், முழு வட்டிக்கும் வரிச் சலுகை கிடைக்கும். அதேநேரத்தில், வாடகையை வருமானமாக காட்டியிருக்க வேண்டும்.  
வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இந்த விஷயங்களையெல்லாம் கவனித்து செயல்பட்டால், வரிச் சலுகையை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்!
நன்றி : நாணயம் விகடன் 

Popular posts from this blog

சொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி?

பாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்!

Launching -- Nimmadhi Transport Services